Monday, February 12, 2018

60. திவ்யதேச தரிசன அனுபவம் - 39 திருவட்டாறு (68)

தரிசனம் செய்த நாள்: 26.01.18  வெள்ளிக்கிழமை 
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
10. திருவாட்டாறு (68)


மாலைமுடி நீத்து மலர்ப்பொன் னடிநோவப்
பாலைவன நீபுகுந்தாய் பண்டென்று - சாலவநான்
கேட்டாற் றுயிலேன்காண் கேசவனே! பாம்பணைமேல்
வாட்டாற்றுக் கண்டுயில்கொள் வாய். (68)
பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி  அந்தாதி 

மலைநாட்டு திவ்யதேசம் என்றாலும், திருவட்டாறு இருப்பது தமிழ்நாட்டில் (திருவண்பரிசாரம் என்ற மலைநாட்டு திவ்யதேசமும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது.) ஆயினும் இது மற்ற கேரளா திவ்யதேசங்களைப் போலவே பூஜை முறைகள் கொண்டது.

பிரும்மாவின் தவத்தைக் கலைக்க, அவருடன் ஊடல் கொண்ட சரஸ்வதி தேவி கேசன், கேசி என்ற இரு அரக்கர்களை அனுப்பினார். பிரும்மா பெருமாளிடம் பிரார்த்திக்க, பெருமாள் கேசனை பூமிக்கு அடியே அழுத்தி அந்த இடத்திலேயே பள்ளி கொண்டு விட்டார். தன் சகோதரன் கேசனை விடுவிக்க, கேசி என்ற அரக்கி பரணி, கோதா என்ற இரு ஆறுகளாகப் பெருக்கெடுத்து வந்தாள். அப்போது பூமாதேவி பெருமாள் படுத்திருந்த இடத்தை மேடாக இருக்கும்படி உயர்த்தி விட்டார்.

கேசி பெருமாளிடம் சரணடைய, பெருமாள் அவளை மன்னித்து, தன்  கோவிலைச் சுற்றி இரு நதிகளும் மாலைபோல் ஓட வகை செய்தார். கோவிலைச் சுற்றி வட்டம் போல் இரு நதிகள் ஓடுவதால் இந்த இடம் திருவட்டாறு என்று பெயர் பெற்றது. காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு நதிகளுக்கிடையே ஸ்ரீரங்கம் அமைந்திருப்பதை போல் இந்தத் தலமும்  அமைந்துள்ளது.

ஹாதலேகர் என்ற முனிவருக்குப் பெருமாள் அஷ்டாட்சர மந்திரத்தை அருளிய பெருமையும் இந்தத் தலத்துக்கு உண்டு.

 திருவனந்தபுரம் கோவிலைப் போல் இந்தக் கோவிலும் மார்த்தாண்டவர்மனால் திருப்பணி செய்யப்பட்டது.

அனந்தபத்மநாபர் போலவே தோற்றம் கொண்ட ஆதிகேசவப் பெருமாள்  சில விஷயங்களில் மாறுபடுகிறார். 

இவர் 22 அடி நீளம் கொண்டவர். மேற்கு நோக்கி சயனித்திருப்பதால் திருமுடி நமக்கு வலப்பக்கமாக இருக்கிறது. அதாவது அனந்தபத்மநாபர் விக்கிரகத்தின் கண்ணாடி பிம்பம் போல் திருமுடியும், திருவடியும் மாறி இருக்கின்றன. (காஞ்சிபுரத்தில் உள்ள திருவெஃகா, திருவட்டாறு ஆகிய இரு தலங்களில்தான் பெருமாள் நமக்கு வலப்புறமாகத் தலை வைத்துப் படுத்துக் கொண்டிருக்கிறார்.) மேலும் நாபிக்கமலத்தில் பிரும்மா இல்லை. இவர் ஆதிகேசவப் பெருமாள் என்பதால் பிரும்மா தோன்றுவதற்கு முன் இருந்த தோற்றத்துடன் இங்கே காட்சி அ ளிக்கிறார்.

இவர் 16008 சாளக்கிராமங்களால் உருவாக்கப்பட்டவர்..

மூலவர் - ஆதிகேசவப் பெருமாள். புஜங்க சயனம். மேற்கு நோக்கிய திருமுக மண்டலம்.

தாயார் - மரகதசவல்லித் தாயார். தனிக்கோவில் சந்நிதி இல்லை.

விமானம் - அஷ்டாங்க விமானம்

தீர்த்தம் -  கடல்வாய்த் தீர்த்தம், வாட்டாறு ராம தீர்த்தம் 

பரசுராமருக்கும், சந்திரனுக்கும் காட்சி கொடுத்த பெருமாள் இவர்.

மூலவர் சந்நிதிக்கு முன் ஒற்றைப்பாறை என்ற ஒரு பெரிய மேடை போன்ற கல் இருக்கிறது. அதன்மீது ஏறி நின்று பார்த்தால்தான் பெருமாளை நன்கு தரிசிக்க முடியும். சில சமயங்களில்தான் இதை அனுமதிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. நாங்கள் தரிசனம் செய்தபோது கோவில் சம்ப்ரோக்ஷணத்துக்கான பணிகள் நடந்து கொண்டிருந்தன. அதனால் இப்போது உத்சவர் சேவை மட்டும்தான். ஆயினும்,  மூலவரை இந்தப் பாறைக்குப் பின் கீழே நின்று தரிசிக்க முடிந்தது.

திருவனந்தபுரம் போல் இங்கும் மூன்று வாயில்கள் மூலம் பெருமாளை தரிசிக்க வேண்டும்.

திருவனந்தபுரம் போல் இங்கும் ஒரு கிருஷ்ணர் சந்நிதி உள்ளது. அதேபோல் தூண்கள் நிறைந்த அகலமான பிரகாரம்.

திருப்பணிகள் முடிந்து ஸம்ப்ரோக்ஷணம் ஆனபிறகு மீண்டும் பெருமாளைத் தரிசிக்கப் பெருமாள் அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்.

இந்த யாத்திரையில் திருவண்பரிசாரம் என்ற மலைநாட்டு திவ்யதேசம் இடம் பெறவில்லை. இதுவும் தமிழ்நாட்டில்தான் உள்ளது - திருவட்டாறிலிருந்து சிறிது தூரம்தான். இந்த திவ்யதேசத்தை தரிசிக்கவும் இன்னொரு முறை வர வேண்டும்.அப்போதுதான் கேரளா திவ்யதேசங்கள் 13ம் பூர்த்தியாகும்.

இந்த திவ்ய தேசம் பற்றிய தஞ்சாவூர் ரமேஷ் அவர்களின் விளக்கத்தை வீடியோக்களில் கேட்டு  மகிழுங்கள்.
இந்த திவ்யதேசம் பற்றி நம்மாழ்வார் பாடியுள்ள 11 பாசுரங்கள் இதோ.
நம்மாழ்வார் 
திருவாய்மொழி 
ஆறாம்  திருமொழி
1.அடியார்தம் அடியனேற்கு ஆழியான்
அருள்தருவான் அமைகின்றான் அதுநமது விதிவகையே
இருள்தருமா ஞாலத்துள் இனிப்பிறவி யான்வேண்டேன்
மருளொழிநீ மடநெஞ்சே! வாட்டாற்றான் அடிவணங்கே. (3946)

2. வாட்டாற்றா னடிவணங்கி மாஞாலப் பிறப்பறுப்பான்
கேட்டாயே மடநெஞ்சே! கேசவனெம் பெருமானை
பாட்டாய பலபாடிப் பழவினைகள் பற்றறுத்து
நாட்டாரோ டியல்வொழிந்து நாரணனை நண்ணினமே. (3947)

3. நண்ணினம் நாரணனை நாமங்கள் பலசொல்லி
மண்ணுலகில் வளம்மிக் க வாட்டாற்றான் வந்தின்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே
எண்ணினவா றாகாவிக் கருமங்க ளென்னெஞ்சே (3948)

4. என்னெஞ்சத் துள்ளிருந்திங் கிருந்தமிழ்நூலிவைமொழிந்து
வன்னெஞ்சத் திரணியனை மார்விடந்த வாட்டாற்றான்
மன்னஞ்சப் பாரதத்துப் பாண்டவர்க்காப் படைதொட்டான்
நன்னெஞ்சே! நம்பெருமான் நமக்கருள்தான் செய்வானே. (3949)

5. வானேற வழிதந்த வாட்டாற்றான் பணிவகையே
நானேறப் பெறு கின்றென் நரகத்தை நகுநெஞ்சே
தேனேறு மலர்த்துளவம் திகழ்பாதன் செழும்பறவை
தானேறித் திரிவான தாளிணையென் தலைமேலே. (3950)

6. தலைமேல தாளிணைகள் தாமரைக்கண் என்னம்மான்
நிலைபேரான் என்நெஞ்சத் தெப்பொழுதும் எம்பெருமான்
மலைமாடத் தரவணைமேல் வாட்டாற்றான் மதமிக்க
கொலையானை மருப்பொசித் தான் குரைகழல்தள் குறுகினமே. (3951)

7. குரைகழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடிகொண்டான்
திரைகுழுவு கடல்புடைசூழ் தென்னாட்டுத் திலதமன்ன
வரைகுழுவும் மணிமாட வாட்டாற்றான் மலரடிமேல்
விரைகுழுவும் நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே. (3952)

8. மெய்ந்நின்று கமழ்துளவ விரையேறு திருமுடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருதுபுனல்
மைந்நின்ற வரைபோலும் திருவுருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனா என்னெஞ்சில் திகழவதுவே? (3953)

9. திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம்தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூ ர்தி போரரக்கர் குலம்கெடுத்தான்
இகழ்வின்றி என்னெஞ்சத் தெப்பொழுதும் பிரியானே. (3954)

10. பிரியாதாட் செய்யென்று பிறப்பறுத்தாள் அறக்கொண்டான்
அரியாகி இரணியனை ஆகங்கீண் டானன்று
பெரியார்க்காட் பட்டக்கால் பெறாதபயன் பெறுமாறு
வரிவாள்வாய் அரவணைமேல் வாட்டாற்றான் காட்டினனே. (3955)

11. காட்டித்தன் கனைகழல்கள் கடுநரகம் புகலொழித்த
வாட்டாற்றெம் பெருமானை வளங்குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ்மாலை யாயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே. (3956)

No comments:

Post a Comment