Friday, February 9, 2018

52. திவ்யதேச தரிசன அனுபவம் - 34 திருவாறன்விளை

தரிசனம் செய்த நாள்: 24.01.18/25.01.18  புதன்கிழமை/ வியாழக்கிழமை 
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
13. திருவாறன்விளை (71)
சென்று புனன்மூழ்கிச் செய்தவங்கள் செய்தாலும்
வென்றுபுல னைந்தடக்கி விட்டாலும் - இன்றமிழால்
மாறன் விளைத்த மறையோதார்க் கில்லையே
ஆறன் விளைத்திருமா லன்பு. (71)
  - பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் 108 திருப்பதி அந்தாதி 

ஆறன்முளா என்று அழைக்கப்படும் திருவாறன்விளை செங்கண்ணூருக்கு அருகில் பம்பா நதியை ஒட்டி உள்ளது. ஆறன்முளா என்ற சொல் ஆறு கொம்புகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட படகைக் குறிக்கிறது. 

மாங்காட்டு நம்பூதிரி என்பவர் இல்லத்தில் ஒவ்வொரு திருவோணத்தன்றும் அதிதியாக வந்து ஒரு பிரம்மச்சாரி உணவு அருந்தி விட்டு வந்தார். 
ஒருமுறை இந்த திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாள், நம்பூதிரியின் கனவில் வந்து, பிரம்மச்சாரியாக வந்து உணவருந்தி விட்டுப் போவது  தான்தான் என்று கூற, பெருமாளைக் காண நம்பூதிரி தன்  ஊரிலிருந்து ஆறு கொம்புகளால் செய்யப்பட்ட ஒரு படகில் வந்தார். அதனால் இந்த ஊருக்கு ஆறன்முளா என்ற பெயர் ஏற்பட்டது.

இந்தக் கோவிலில் இருக்கும் பெருமாள் முதலில் நிலக்கண் என்ற ஊரில் உள்ள கோவிலில் இருந்ததாகவும் நிலக்கண் நாராயணன் என்று பெயர் பெற்ற அந்தப் பெருமாள் இந்த ஊறில் எழுந்தருள விரும்பி, ஒரு பக்தரின் கனவில் வந்து தன்னை இங்கே பிரதிஷ்டை செய்யும்படி கூறியதாகவும், அதன்படி நிலக்கண் நாராயணர் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் ஒரு ஐதீகம் உண்டு.

வியாசரும், பிரம்மாவும் மது, கைடபர்கள் என்ற அரக்கர்களை அழிக்கக் கோரி விஷ்ணுவைக் குறித்து இங்கே தவம் செய்தனர். அப்போது பெருமாள் பிரம்மா, வியாசர் இருவருக்கும் காட்சி கொடுத்தார்.

இந்தக் கோவில் அர்ஜுனனால் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மகாபாரதப் போரில் கர்ணனை யுத்த தர்மத்துக்கு விரோதமாக அவன் ஆயுதம் ஏந்தாதபோது கொன்றதற்குப் பிராயச்சித்தமாக, அர்ஜுனன்  இந்தக் கோவிலைப்  புனர்நிர்மாணம் செய்தான்.  

(இதுபோல் யுதிஷ்டிரன் திருச்செங்கண்ணூரிலும், பீமன் திருப்புலியூரிலும், நகுலன் திருவண்வண்டூரிலும், சகதேவன் திருக்கடித்தானத்திலும் கோவிலைப் புனர்நிர்மாணம் செய்திருக்கிறார்கள். இது தவிர, இவர்கள் ஐவரும் திருவித்துவக்கோட்டில் நான்கு சந்நிதிகளை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.)

அர்ஜுனனால் நிறுவப்பட்டதால் இந்தப் பெருமாளுக்கு பார்த்தசாரதி என்று பெயர். வாமன மூர்த்தியைக் குறிக்கும் திருக்குறளப்பன் என்ற பெயரும் உண்டு. (நம்மாழ்வாரின் தாயாரின் ஊரான திருவண்பரிசாரத்திலும் பெருமாளின் பெயர் திருக்குறளப்பன் என்பதுதான்)

இங்கே ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் படகுப்போட்டி பிரசித்தி பெற்றது.

24.01.18 இரவு சுமார் 8 மணிக்கு நடை சாத்தும் முன்பு கோவிலுக்குப் போனேன். அப்போது ஸ்ரீவேலி முடிந்ததும் சந்நிதியைத் திறந்தபோது பார்த்தசாரதிப் பெருமாள் சந்தனக்காப்பில் மிக அழகாகத் தோற்றமளித்தார். மறுநாள் அதிகாலை நாலரை மணிக்கு கோவிலுக்குச் சென்றபோது விஸ்வரூப தரிசனமும் கிடைத்தது. பிறகு மீண்டும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்தார்கள்.

மூலவர் - பார்த்தாதிசாரதி, திருக்குறளப்பன். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்

தாயார் - பத்மாஸனித் தாயார் (தனிக் கோவில் சந்நிதி இல்லை)

விமானம் - வாமன விமானம் 

தீர்த்தம் - பம்பா  தீர்த்தம், வேதவியாஸ சரஸ் 

பிரகாரத்தில், கீழ்த்தளத்தில் பலராமர் சந்நிதி அமைந்திருக்கிறது.படிகளில்   றங்கி கீழே செல்ல வேண்டும். பிரகாரத்தை ஒட்டியே பம்பா நதிப்  படிக்கட்டும் இருக்கிறது.

கோவிலின் சிறப்பை விளக்கும் வீடியோக்கள் கீழே.இந்த திவ்யதேசம் பற்றி நம்மாழ்வார் 11 பாசுரங்கள் பாடியுள்ளார். நம்மாழ்வாரின் பாசுரங்களை இந்த திவ்யதேசத்துப் பெருமாளே கேட்டு ரசித்ததாகச் சொல்லப்படுவது உண்டு.
நம்மாழ்வார் 
திருவாய்மொழி 
ஏழாம்  பத்து 
பத்தாம் திருமொழி 
1. இன்பம் பயக்க எழில்மலர் மாதரும் தானுமிவ் வேழுலகை,
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந் தாள்கின்ற எங்கள்பிரான்,
அன்புற் றமர்ந்துறை கின்றா ணிபொழில் சூழ்திரு வாறன்விளை,
அன்புற் றமர்ந்து வலம்செய்து கைதொழும் நாள்களும் ஆகுங்கொலோ. (3660)

2. ஆகுங்கொல் ஐயமொன் றின்றி அகலிடம் முற்றவும், ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறள் அப்பன் அமர்ந்துறையும்,
மாகம் திகழ்கொடி மாடங்கள் நீடும் மதிள்திரு வாறன்விளை,
மாகந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழுங் கூடுங்கொலோ. (3661)

3. கூடுங்கொல் வைகலும் கோவிந்த னைமது சூதனைக் கோளரியை,
ஆடும் பறவை மிசைக்கண்டு கைதொழு தன்றி யவனுறையும்,
பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வியைந் தாறங்கம் பன்னினர்வாழ்,
நீடு பொழில்திரு வாறன் விளைதொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே. (3662)

4. வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழு தும்மனத்து ஈங்கு நினைக்கப்பெற
வாய்க்கும் கரும்பும் பெருஞ்செந் நெலும்வயல் சூழ்திரு வாறன்விளை,
வாய்க்கும் பெரும்புகழ் மூவுல கீசன் வடமது ரைப்பிறந்த,
வாய்க்கும் மணிநிறக் கண்ணபி ரான்றன் மலரடிப் போதுகளே. (3663)

5. மலரடிப் போதுகள் என்னெஞ்சத் தெப்ப்பொழு துமிருத் திவணங்க,
பலரடி யார்முன் பருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்,
மலரில் மணிநெடு மாடங்கள் நீடு மதில்திரு வாறன்விளை,
உலகம் மலிபுகழ் பாடநம் மேல்வினை ஒன்றும்நில் லாகெடுமே. (3664)

6. ஒன்றும்நில் லாகெடும் முற்றவும் தீவினை யுள்ளித் தொழுமிந்தொண்டீர்,
அன்றங் கமர்வென் றுருப்பி ணிநங்கை யணிநெடுந் தோள்புணர்ந்தான்,
என்றுமெப் போதுமென் னெஞ்சம் துதிப்ப வுள்ளேயிருக் கின்றபிரான்,
நின்ற அணிதிரு வாறன் விளை யென்னும் நீணக ரமதுவே. (3665)

7. நீணக ரமது வேமலர்ச் சோலைகள் சூழ்திரு வாறன்விளை,
நீணக ரத்துறை கின்றபி ரான்நெடு மால்கண்ணன் விண்ணவர்கோன்
வாண புரம்புக்கு முக் கட்பி ரானைத் தொலையவெம் போர்கள்செய்து,
வாணனை யாயிரந் தோள்துணித் தாஞ்சரண் அன்றிமற் றொன்றிலமே. (3666)

8.அன்றிமற்  றொன்றிலம் நின்சர ணே!என் றகலிரும் பொய்கை யின்வாய்,
நின்றுதன் நீள்கழ லேத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்,
சென்றங் கினிதுறை கின்ற செழும்பொழில் சூழ்திரு வாறன்விளை,
ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ? தீவினை யுள்ளத்தின் சார்வல்லவே. (3667)

9. தீவினை யுள்ளத்தின் சார்வல்ல வாகித் தெளிவிசும் பேறலுற்றால்,
நாவினுள் ளுமுள்ளத் துள்ளும் அமைந்த தொழிலினுள் ளும்நவின்று,
யாவரும் வந்து வணங்கும் பொழில்திரு வாறன் விளையதனை,
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல் என்னுமென் சிந்தனையே. (3668)

10. சிந்தைமற் றொன்றின் திறத்ததல் லாத்தன்மை தேவபி ரானறியும்,
சிந்தையி னால்செய்வ தானறி யாதன மாயங்கள் ஒன்றுமில்லை,
சிந்தையி னால்சொல்லி னால்செய்கை யால்நிலத் தேவர் குழுவணங்கும்,
சிந்தை மகிழ்திரு வாறன் விளையுறை தீர்த்தனுக் கற்றபின்னே.(3669)

11. தீர்த்தனுக் கற்றபின் மற்றோர் சரணில்லை யென்றெண்ணி,
தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தன னாகிச் செழுங்குரு கூர்ச்சட கோபன்சொன்ன,
தீர்த்தங்க ளாயிரத் துள்ளிவை பத்தும்வல் லார்களை, தேவர்வைகல்
தீர்த்தங்க ளேயென்று பூசித்து நல்கி யுரைப்பார்தம் தேவியர்க்கே. (3670)

ஓம் நமோ நாராயணாய!

No comments:

Post a Comment